553 அரச பஸ்களையும் , 15 டிப்போக்களையும், 24 புகையிரத நிலையங்களையும் அரச சொத்துக்களையும் தீ வைத்து அழித்தவர்கள் ஜே .வி.பி.யினர் . ஆகவே 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று கூறும் ஜே .வி.பி.யினர்தான் அந்த சாபத்தின் முக்கிய பங்காளிகள் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்த அவர்,
தற்போதய அரச தரப்பினர் கடந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்று விமர்சிக்கிறார்கள்.
75 ஆண்டு காலத்தை சாபம் என்று கூறுகின்றீர்கள். 75 ஆண்டு அரசியல் கட்டமைப்பில் நாட்டுக்கு ஏதும் நடக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.
சாபத்தின் பிரதான பங்குதாரர் ஜே .வி.பி.யை குறிப்பிட வேண்டும்.
553 அரச பஸ்களையும், 15டிப்போக்களையும், 24 புகையிரத நிலையங்களையும் அரச சொத்துக்களையும் தீ வைத்து அழித்தவர்கள் ஜே .வி.பி.யினர் .
ஆகவே 75ஆண்டுகாலத்தை பற்றி பேசும் போது உங்கள் வரலாற்றை மறக்க வேண்டாம்.
ஆகவே 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று கூறும் ஜே.வி.பி.யினர் தான் அந்த சாபத்தின் முக்கிய பங்காளிகள்.
ராஜபக்சக்களின் ஊழல் மோசடி பற்றி பேசுகிறார்கள். மஹிந்த ராஜபக்சவை யார் நியமித்தது? மஹிந்த ராஜபக்சவின் மேடைக்கு நாங்கள் செல்லவில்லை.
ஜே.வி.பி. தான் மஹிந்த ராஜபக்ச நல்லவர் என்று கூறிக் கொண்டு அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தது.
1994 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு ஜே .வி.பி. நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியது. ஆகவே எவருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறாதீர்கள் என்றார்.